கைகளின் வலிமை

நீதி:  உண்மை /அன்பு

உப நீதி:  நன்றி உணர்வு

பாட்டி…. தொண்ணூறு வயதைக் கடந்தவர். முற்றத்தில் உள்ள பலகையில் அமர்ந்து இருந்தார். அவள் அசையவில்லை, தலையைக் குனிந்து தனது கைகளை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

அவரின் பேரன் அருகில் வந்து அமர்ந்ததைக் கூட அவர் சட்டை செய்யவில்லை.  வெகு நேரம் ஆனதும், அவன் பாட்டியின் நலம் குறித்து கவலை கொண்டான்.  

பிறகு,  அவரைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல்,  அதே சமயம் அவர் சரியாக இருக்கிறாளா என்று பார்ப்பதற்கு அவரிடம் நலம் விசாரித்தான். அவர் தலையை தூக்கி பார்த்து புன்முறுவலுடன்,” நான் நன்றாக இருக்கிறேன். கேட்டதற்கு நன்றி,” என்று கணீரென்ற குரலில் கூறினார்.

பேரன் “உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால் நீங்கள் அப்படியே அமர்ந்து உங்கள் கைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் பேச்சு கொடுத்தேன்”, என்று கூறினான்.

பாட்டி “ நீ எப்பொழுதாவது உனது கைகளை கூர்ந்து கவனித்திருக்கிறாயா?, என்று வினவினார்.

அவன் மெதுவாகக் கைகளை உற்று நோக்கினான். முன்னும் பின்னும் பார்த்துவிட்டு,” இல்லை.  நான் கூர்ந்து கவனித்தது இல்லை”, என்று கூறிவிட்டு பாட்டி என்ன சொல்ல வருகிறாள் என்பதை சிந்தித்தான்.

பாட்டி புன்னகைத்து, “நிறுத்தி நிதானமாக உனது கைகளை பற்றி யோசித்துப் பார். உனது வாழ்நாள் முழுவதும் அவை உனக்கு எவ்வாறு சேவை செய்திருக்கின்றன; எனது கைகள் இப்போது சுருக்கங்கள் விழுந்து பலவீனமாகி இருந்தாலும்,  இவை உபகரணங்களாக இருந்து எனது வாழ்நாள் முழுவதையும்  அணைத்துக் கொள்ள உதவியிருக்கின்றன” என்று கூறினார்.

நான் சிறு குழந்தையாய் இருந்த போது, அந்தக் கைகள் நான் கீழே விழாமல் தடுத்து பிடித்துக் கொண்டன.

உணவை வாயில் போடவும் உடைகளை அணிந்து கொள்ளவும் உதவியன. குழந்தைப் பருவத்தில், எனது கைகளைக் கூப்பி,  கடவுளை வணங்க என் தாய் கற்றுத் தந்தார்.   எனது காலணிகளை அணிந்து கொள்ள உதவியிருக்கின்றன.

என் மகன் பிறந்த போது அவனைப் பிடித்துக் கொள்ளத் தெரியாமல் கைகள் தவித்தன. மோதிரத்தை அணிவித்து அழகு பார்த்த போது, நான் திருமணமானவள் என்பதை உலகிற்கு தெரிவித்து,  என் மனதுக்கு பிடித்தவர் மேல் இருந்த காதலை பறைசாற்றின. என் கணவனை பிடித்துக் கொள்ளவும் பிறகு அவர் போருக்குச் சென்ற போது என் கண்ணீரைத் துடைக்கவும் செய்தன.

அவருக்கான எனது கடிதங்களை எழுதின.  பெற்றோரையும்,  துணைவரையும்  மண்ணில் புதைத்த போது நடுங்கின.

எனது குழந்தைகளையும், பேரப்பிள்ளைகளையும் சுமந்தன. அண்டை அயலாருக்கு ஆறுதல் அளித்துள்ளன.  கோபத்தில் சில சமயம் அதிர்ந்துள்ளன.

என் முகத்தை மூடி இருக்கின்றன. தலையை கோதி இருக்கின்றன. உடலை சுத்தப்படுத்தி இருக்கின்றன. அவை ஈரமாய், பிசுபிசுப்பாய், வளைந்து உடைந்து காய்ந்து போனதுண்டு.  அழுக்காய்,  அடிபட்டு,  வீங்கி காய்ந்து போயிருக்கின்றன.  இன்று,  எனது மற்ற அங்கங்கள் சரியாக வேலை செய்யாவிட்டாலும் இந்த கைகள் என்னைத் தாங்கிப் பிடிக்கின்றன. படுக்க வைக்கின்றன.  மீண்டும் பிரார்த்தனையில் கூப்புகின்றன.

இந்தக் கைகள் தான் வாழ்க்கையில் நான் கடந்து வந்த கரடு முரடான பாதைக்கான அடையாளங்கள்.  

ஆனால் அதைவிட முக்கியமாக, கடவுள் என்னை மீண்டும் அவர் வீட்டிற்கு அழைத்துப் போவதற்கு பிடித்துக் கொள்ள உதவப் போவதும் இந்த கைகள் தான். இந்தக் கைகளை பிடித்து,  என்னைத்  தூக்கி அவர் பக்கத்தில் இருத்திக் கொள்வார். நான் அப்போது கடவுளின் முகத்தை தொட்டுப் பார்ப்பதற்கு உதவப் போவதும் இந்தக் கைகள் தான்.

அதன் பிறகு அந்தப் பேரன், தன் கைகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கினான். கடவுள் அவர் கைகளை நீட்டி பாட்டியின் கைகளைப் பற்றி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றது அவன் நினைவில் நின்றது. அவனும் கூட, கடவுளின் முகத்தை தொட்டுப் பார்க்கவும், அவனது முகத்தில் அவரது கரங்கள் படர்வதை உணரவும்  விரும்பினான்.

பாட்டி என்பவர் நமது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அவர் ஒரு தேவதையைப் போன்றவர். நம்மை அவர் அடை காப்பது போல் காத்து, நமக்காக பிரார்த்தனை செய்து, அவரது கவனத்திலேயே நம்மை வைத்து, நமக்காக எதையும் தருபவர்.

நீதி:  

கடவுள் நமக்கு பல அழகான விஷயங்களையும்,  நல்ல மனிதர்களையும் பரிசாக அளித்துள்ளார். ஆனால் பல நேரங்களில் நாம் அவற்றை உணராமல் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.  அப்படி அவர் நமக்கு அளித்துள்ள  சில நல்ல விஷயங்கள்—நமக்கு பார்வை தரும் கண்கள், நடக்க உதவும் கால்கள், நல்ல வாசனைகளை நுகர உதவும் நாசி,  நல்ல இசையைக் கேட்டு ரசிக்கும் காதுகள், ருசியான உணவுகளை சுவைக்கும் நாவு,  மென்மையான ஸ்பரிசத்தை உணரும் சருமம்—இவை அனைத்துமே கடவுளால் நமக்கு அளிக்கப்பட்ட ஈடு இணையற்ற பரிசுகளாகும்.  அவற்றை நாம் மதிப்பதில்லை. பிரபஞ்சமே,  கடவுள் அளித்துள்ள இப்படிப்பட்ட அழகிய விஷயங்களால் நிரம்பி இருக்கிறது. நாம் இவ்வழகிய விஷயங்களை உணர்வதற்கு நமது மனதை, நன்றியுணர்வு, பொறுமை,  நிலையான விழிப்புணர்வு போன்ற நற்குணங்களால் நிரப்ப வேண்டும். அப்போதுதான்,  நம்மை சுற்றி நடக்கும்,  ஒவ்வொரு சிறிய நிகழ்வும் எவ்வாறு நம்மை பாதிக்கிறது என்பதை உணர முடியும்.

எனவே நமக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கும் மனிதர்களுக்கும் நாம் நன்றியுடன் இருப்போம். நம்மை சுற்றியுள்ள மனிதர்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தால், வாழ்க்கை மேலும் அர்த்தமுள்ளதாக அமையும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி கணேஷ்சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment