ஆன்மாவுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் விஷயங்கள்

நீதி: உண்மை

உபநீதி: மன நிறைவு / அக்கறை மற்றும் பகிர்ந்து கொள்ளுதல்

ஒரு மனிதன் தனியாக வாழ்ந்து வந்தான். தனிமையாக இருக்கும் நேரத்தை ஒரு செல்லப் பிராணியுடன் கழிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு, கிளியை வாங்குவதற்காக அவன் செல்லப் பிராணிகள் விற்கும் இடத்திற்குச் சென்றான்.

அடுத்த நாளே, கடைக்குச் சென்று “அந்தப் பறவை பேசுவதே இல்லை” என்று புகார் கூறினான்.

கடை முதலாளி, “கூண்டில் கண்ணாடி இருக்கிறதா?” என்று கேட்டான். அதற்கு அம்மனிதன் “இல்லை” என்று பதிலளித்தான். அதற்கு முதலாளி, “அப்படியா, கிளிகளுக்கு கண்ணாடிகள் என்றால் விருப்பம்” என்று கூறிவிட்டு, “தன்னுடைய பிரதிபலிப்பை கண்ணாடியில் பார்த்தால், அது உடனடியாக பேசும்” என்று கூறி ஒரு பறவைக் கூண்டு கண்ணாடியை அம்மனிதனிடம் விற்றார்.

பறவையை வாங்கிய மனிதன் மறுபடியும் அடுத்த நாளே முதலாளியிடம் சென்று இன்னும் அது பேசவில்லை என்று கூறினான். அதற்கு முதலாளி, “ஆச்சரியமாக இருக்கிறதே” என்று கூறி “நீங்கள் ஒரு ஊஞ்சல் வாங்கிப் பாருங்களேன். பறவைகளுக்கு ஊஞ்சல்கள் என்றால் மிகவும் விருப்பம். சந்தோஷமாக இருக்கும் கிளி பேசிக் கொண்டே இருக்கும்” என்று கூறினார். அதனால் அம்மனிதன் ஒரு ஊஞ்சலை வாங்கி கூண்டில் போட்டான்.

மறுபடியும் அதே கதை. மனிதன் கடைக்குச் சென்று, கிளி பேசாததைக் கூறினான். உடனே கடையில் இருப்பவர், “ஏறுவதற்கு ஏணி இருக்கிறதா?” என்று கேட்டார். பிறகு கடைக்காரர், அதுதான் பிரச்சனை என்று கூறி விட்டு, ஏறுவதற்கு ஏணி இருந்தால், கிளி உடனடியாக பேசிக் கொண்டே இருக்கும் என்று கூறியவுடன், அம்மனிதன் ஒரு ஏணியை வாங்கினான்.

அடுத்த நாள் மறுபடியும் அம்மனிதனை கடையில் பார்த்த முதலாளி, ஏதோ தவறு நடந்திருக்கிறது என புரிந்து கொண்டார்.

அவர், “உன் கிளிக்கு ஏணி பிடிக்க வில்லையா?” எனக் கேட்டார்.

அதற்கு மனிதன், “கிளி இறந்து விட்டது” எனக் கூறினான்.

முதலாளி வியப்புடன், “நான் மிகவும் வருந்துகிறேன்” எனக் கூறி “கிளி வேறு ஏதாவது பேசியதா?” என்று கேட்டார்.

அதற்கு மனிதன், “ஆம், இறந்து போவதற்கு முன்பு, மெல்லிய வலுவற்ற குரலில், ‘செல்லப் பிராணிகள் விற்கும் கடையில், உண்ணுவதற்கு ஏதேனும் விதை விற்பதில்லையா?’ என்று கேட்டது” எனக் கூறினான்.   

மெய்யாக நம் உருவத்தின் பிரதிபலிப்பையே பார்த்துக் கொள்வது, கருவிகளுடன் விளையாடுவது மற்றும் கூட்டு ஸதாபனத்தில் மென்மேலும் உயர்வது போன்றவை இருதயத்தில் இருக்கும் ஆன்மீக தேடுதலுக்கு மன நிறைவு அளிக்காது. தவறுதலாக, நம்முள் சிலர் சந்தோஷம் என்றால் பொம்மைகள், தொழில் நுட்ப கருவிகள் போன்றவையை சேர்த்துக் கொள்வது என்று நினைக்கிறோம். அப்படி தானா?

நம் இருதயம் மற்றும் ஆத்மாவிற்கு உண்மையான ஊட்டச்சத்து தேவையாக இருக்கிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பு, தனிப்பட்ட ஒருமைப்பாடு, கடவுளிடம் ஒரு பாதுகாப்பான இணைப்பு – இவை அனைத்தும் ஆன்மாவுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் விஷயங்கள்.

நீதி:

இன்றைய கால கட்டத்தில், வெற்றியை நோக்கி வேலை செய்ய நாம் தள்ளப் படுகிறோம். அதனால், நாம் புதிய திறமைகளை மேம்படுத்திக் கொண்டு, இலக்கை அடைவதற்கு பாடுபட வேண்டும். அதனால் நமக்கு குடும்பம், நண்பர்கள் மற்றும் சுற்றுச் சூழலில் இருப்போர்களை கவனிக்க நேரம் இருப்பதில்லை. நாம் அறியாமலேயே, இந்த உலகளாவிய இலக்கை சுலபமாக அடைவதற்கு உதவியாக இருக்கும் கருவிகளுடன் நாம் நம்மை இணைத்துக் கொள்கிறோம். அதனால் மற்ற விஷயங்களுக்கு நேரம் இருப்பதில்லை. நம் வாழ்க்கை முறையை சரியான முறையில் சமாளிப்பதற்கு நாமே நம்மை பக்குவப் படுத்திக் கொண்டு, நம் குடும்பத்தினர்  மற்றும் நண்பர்களுடன் நேரத்தை பயனுள்ளதாக செலவழித்து, அவர்களுக்கு உதவி வேண்டும் என்று நம்மிடம் வந்தால், உதவி கரங்களை நீட்ட வேண்டும். முக்கியமாக, தொழில்நுட்பம் சார்ந்த எண்ணங்களை விட்டு விட்டு, உண்மையான அவசியங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்வதனால், நாம் மன நிம்மதி மற்றும் மன நிறைவை உணர முடியும். மற்றவர்களின் சுமைகளை அக்கறையுடன் புரிந்து கொண்டால், மற்ற மனிதர்களுடனும், உலகத்துடனும் அதிக இணைப்பை உணர முடியும். இது, தினசரி வாழ்க்கையில் சமூக தொடர்பை அதிகரிக்கும். அன்பும், பரிவும் இருந்தால், உலகமே வாழ்வதற்கு சிறந்த இடமாக மாறுகிறது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment