சாதுவைப் போல் நடித்த மீனவன்

நீதி நன் நடத்தை

உப நீதி – மாற்றம்

The fisherman who pretended like a sage - picture 1ஒரு நள்ளிரவு நேரம், மீனவன் ஒருவன், தனியார் தோட்டத்திற்குள் திருட்டுத்தனமாக நுழைந்தான்; அங்கு, மீன்கள் நிறைந்த ஒரு குளம் இருந்தது. அந்த வீடு இருட்டாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். வீட்டில் உள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் என எண்ணி, அந்தக் குளத்திலிருந்து சில மீன்களைப் பிடிக்கலாம் என்று முடிவு செய்தான்.

the fisherman who pretended like a sage - picture 2ஆனால், மீனவன் வலையை தண்ணீரில் வீசும் போது, அந்த சத்தம் வீட்டுக்காரரை எழுப்பியது. உடனே அவர், “உனக்கு அந்த சப்தம் கேட்டதா? யாரோ நம் மீன்களைத் திருடுகிறார்கள் போலிருக்கே!” எனக் கூறினார்.

எஜமானன் வேலையாட்களை அழைத்து வெளியில் சென்று பார்க்கச் சொன்னார். மீனவன் குழப்பத்தில் தவித்து, “அவர்கள் இந்தப் பக்கம் தான் வருகிறார்கள்! என்னை அடிக்க விரைவில் வந்து விடுவார்களே. நான் என்ன செய்வேன்? ” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

the fisherman who pretended like a sage - picture 3அவன் அவசரமாக வலையை ஒரு புதருக்குள் ஒளித்து விட்டு ஓடத் துவங்கினான். ஆனால் தப்பிக்க வழி ஏதும் இல்லாததால், ஒளிந்து கொள்ள ஒரு இடத்தைத் தேடிக் கொண்டிருந்தான். அச்சமயம், அங்கு  எரிந்து கொண்டிருக்கும் தீ ஒன்றைப் பார்த்தான். அநேகமாக, ஒரு சாது அங்கு யாகம் செய்து விட்டு சென்றிருப்பார் என எண்ணினான்.

இதைவிட சாதகமான சந்தர்ப்பம் கிடைக்காது என்று எண்ணினான்; விதிக்கு நன்றி கூறி, சற்று நிம்மதியடைந்தான். அவன் உடனடியாக தன் தலைப்பாகையைக் கழற்றி, சிறிது சாம்பலைத் தன் கைகளிலும், நெற்றியிலும் பூசிக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் ஒரு சாதுவைப் போல நடித்து, அந்தத் தீயின் முன் அமர்ந்தான்.

துரத்திய வேலையாட்கள் சாதுவைக் கண்டு, தொந்தரவு செய்யாமல் விட்டு விடலாம் என்று முடிவு செய்தனர்.

“என்ன ஆயிற்று? திருடனைக் கண்டு பிடித்தீர்களா?” என்று கேட்டார் வீட்டு எஜமானர்.

“அதிர்ஷ்டம் இல்லை ஐயா. அவன் தப்பிவிட்டான். ஆனால் சாது ஒருவர் நமது தோட்டத்தில் தியானம் செய்து கொண்டிருக்கிறார்” என்று வேலையாட்கள் கூறினர்.

உடனே வீட்டுக்காரர், “என் தோட்டத்தில் ஒரு சாதுவா! நான் பெரும் பாக்கியசாலி. என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறினார்.

வேலையாட்கள் அவரை,  மீனவன் தியானம் செய்வது போல அமர்ந்திருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அருகில் சென்ற போது,  எஜமானன் அந்த மகரிஷிக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதென்று தம் ஆட்களை அமைதியாக இருக்கும்படிக் கூறினார்.

“நான் அவர்களை ஏமாற்றி விட்டேன், அந்த வீட்டு எஜமானனைக் கூட!” என்று நடித்துக் கொண்டிருக்கும் மீனவன் நினைத்தான்.

ஒரு வழியாக அந்த வீட்டு எஜமானனும் அவருடைய வேலையாட்களும் கிளம்பிச் சென்றனர். மீனவன், இன்னும் சில மணி நேரங்கள் அமைதியாக அமர்ந்து கழித்து விடலாம், பின்னர் விடியும் சமயத்தில் தப்பித்து விடலாம் என்று முடிவு செய்தான். அதிகாலை நேரம்,  அவன் தப்பிக்க முயன்ற போது, ஒரு இளம் தம்பதியர் கையில் குழந்தையுடன் அவனை நோக்கி வருவதைக் கண்டான்.

அவர்கள், “ஸ்வாமி! நாங்கள் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு, ஆசீர்வாதம் பெற இங்கு வந்துள்ளோம். எங்கள் குழந்தையை ஆசீர்வதியுங்கள்” என்று கூறினர்.

நடித்து கொண்டிருக்கும் மீனவன், “பகவான் உங்களை ரக்ஷிக்கட்டும்!” எனக் கூறினார்

the fisherman who pretended like a sage - picture 4அந்த தம்பதி கிளம்பியவுடன், ஒரு பெரிய மக்கள் கூட்டமே அவனிடமிருந்து ஆசீர்வாதம் பெற வருவதை மீனவன் கண்டான். அவர்கள் பூ, இனிப்பு வகைகள், மேலும் வெள்ளித் தட்டுகள் போன்ற பல விதமான பொருட்களை அவனுக்கு காணிக்கையாக தம் கைகளில் வைத்திருந்தனர்.

மீனவன், மக்கள் காட்டும் மரியாதை மற்றும் பக்தியைக் கண்டு  நெகிழ்ந்தான். இனிமேல் நடிப்பதை விட்டுவிட்டு, ஒரு உண்மையான சாதுவாக மாறுவதென்று முடிவெடுத்தான். திருட்டுத் தொழிலைக் கைவிட்டு மீதி இருந்த தம் வாழ்நாட்களை பக்தியிலும் தியானத்திலுமே செலவிட்டான்.

நீதி

இக் கதையில் வரும் திருடனைப் போல,  பல சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம் வாழ்கையை மாற்றுகின்றன. முதலில் ஒருவன் நடிக்கத் துவங்குகிறான். விரைவில் அவன் அதுவாகவே மாறிவிடுகிறான். சிறிது நேரம் நடித்ததற்கே இப்படி ஒரு மாற்றம் என்றால், தொடர்ந்து நல்லதையே செய்தால் நம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று யோசிக்க இந்த கதை தூண்டுகிறது. அதனால், எச்சமயத்திலும் நற்செயல்கள் செய்வதில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால், நம் எண்ணங்களும், மனப்பான்மையும் நல்ல விதத்தில் திருப்பம் அடையும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

5 thoughts on “சாதுவைப் போல் நடித்த மீனவன்

  1. Pingback: சாதுவைப் போல் நடித்த மீனவன் — Saibalsanskaar Tamil – தமிழ்பண்ணை.நெட் www.tamilpannai.net

Leave a reply to Visu Cancel reply