ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

நீதி: அமைதி

உபநீதி: ஒற்றுமை, பொறுப்பு

ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, நான்கு மகன்கள் மற்றும் மருமகள்களும் ஒன்றாக வாழ்ந்தனர்.

நான்கு மருமகள்களும் நல்லவர்களாக இருந்தனர்; ஆனால் எச்சமயமும் அவர்களுக்குள் யார் எந்த வேலையை செய்ய வேண்டும் என்ற சச்சரவு இருந்தது. 

ஒரு நாள், மாமியார் இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்பை ஒதுக்கினார். மாமியார் நான்கு மருமகள்களையும் அழைத்து “நீங்கள் எல்லோரும் நல்லவர்கள்; பொறுப்புகள் தெளிவாக இல்லாததனால் உங்களுக்குள் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன. இப்போது பொறுப்பை சரியாக தீர்மானிக்கலாம்.

முதல் மருமகள் உணவைத் தயாரிக்க வேண்டும்.

இரண்டாவது மருமகள் மேஜையை சீராக அமைக்க வேண்டும்.

மூன்றாவது மருமகள் உணவை பரிமாற வேண்டும்.

நான்காவது மருமகள் பாத்திரங்களை சுத்தம் செய்து, மேஜையைத் துடைக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் அவரவர் வேலையை முடித்த பிறகு அறிவித்தால், மற்றவர்கள் தங்களின் வேலையை செய்வதற்கு உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு வாரமும் இந்த பொறுப்புகள் மாறி மாறி வரும்” என்று கூறினார்.

எல்லோரும் இந்த சிந்தனையை ஒப்புக் கொண்டனர்.

அடுத்த நாள் முதல் மருமகள் சமையலை முடித்த பிறகு, எல்லோரிடமும் “சமையல் முடிந்து விட்டது” என்றாள்.

இரண்டாவது மருமகள் உணவை மேஜையில் வைத்து விட்டு, “மேஜையில் உணவு வைக்கப் பட்டிருக்கிறது. எல்லோரும் சாப்பிட வாருங்கள்” என்றாள்.

மூன்றாவது மருமகள் உணவை பரிமாறிய படி “உணவு எல்லோருக்கும் பரிமாறி விட்டேன்” என்றாள்.

நான்காவது மருமகள் எல்லா தட்டுகளையும், பாத்திரங்களையும் மேஜையிலிருந்து எடுத்து, சுத்தம் செய்து, “பாத்திரமும், மேஜையும் சுத்தம் செய்தாகி விட்டது” என்றாள்.

மாமியார் வாயடைத்து போனார்.

எல்லோரும் தங்கள் பணியையும், பொறுப்பையும் சரிவர செய்தனர்; ஆனால் உணவை எவருமே உண்ணாததால் எல்லாமே வீணாகியது.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்? பொறுப்புகளை பகிர்வது முக்கியமல்ல; குழுவாக விவேகத்துடன் செயற்படுவது மிகவும் முக்கியம்.

நீதி:

ஒற்றுமை வலிமை. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பணி புரிவது என்பது வேலையை பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல; இலக்கை மனதில் வைத்துக் கொண்டு, பணியை சரியாக செய்து, அதன் விளைவுகள் வெற்றிகரமாக இருக்க வேண்டும். ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும் போது, பல விஷயங்களை கற்றுக் கொள்வதோடு, பணியை குறைவான நேரத்தில் முடிக்கலாம்.

“நீங்கள் செய்ய முடியாததை நான் செய்யலாம், நீங்கள் செய்ய முடிந்ததை நான் செய்ய முடியாமல் இருக்கலாம்; ஒன்று சேர்ந்தால் நாம் சிறப்பான விஷயங்களை செய்யலாம்”. மதர் தெரேசா  

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment