துணிவே பலன் தரும்

நீதி: நன்னம்பிக்கை, உண்மை

உபநீதி: மன உறுதி,  திட நம்பிக்கை

தந்தையும், மகனுமாக இரு குரங்குகள் ஒரு பெரிய மரத்தில் ஒன்றாக அமர்ந்திருந்தன.

மகன் தந்தையிடம் “எனக்குப் பசிக்கிறது; சாப்பிடுவதற்கு சில இலைகளை கொண்டு வர முடியுமா” என்று கேட்டது.

தந்தை மகனைப் பார்த்து புன்சிரிப்புடன், “உனக்கு வேண்டுமென்றால் நீயே போய் எடுத்துக் கொள்” என்று சொன்னது.

அதற்கு மகன் “எனக்கு எப்படி என்று தெரியாது” என்று மறுப்பு தெரிவித்தது.

அதற்குத் தந்தை, “அடிமரம் அருகில் உள்ள காய்ந்த, சுவையில்லாத இலைகளையோ அல்லது கிளையின் நுனிக்குச் சென்று, அங்குள்ள பசுமையான, புதிய இலைகளையோ பறித்து உண்ணலாம்; நீயே தேர்வு செய்து கொள்” என்று சொன்னது.

மகன் “இது முறையல்ல. சுவையான பசும் இலைகள், எல்லோரும் எளிதில் பறிக்கும் இடத்தில் ஏன் இருக்கக் கூடாது? என்று கேட்டது.

அதற்குத் தந்தை, “அது தான் விஷயம். எல்லோரும் எளிதில் எடுக்கக் கூடியதாக இருந்தால், அந்த இலைகள் இவ்வளவு பசுமையாக இருக்காது” என்றது.

உடனே மகன், “சிறிய கிளைகளுக்கு போவது மிகவும் ஆபத்தானது அல்லவா? கிளைகள் முறியலாம் அல்லது நான் பிடியைத் தவறவிட்டுக் கீழே விழலாம்” என்றது.

அதற்குத் தந்தை “மகனே! நன்கு கவனி. இதை நீ நினைவில் கொண்டால், நீ செய்யும் எல்லாச் செயல்களிலும் வெற்றி அடைவாய். மேலும் உனக்கு எப்பொழுதுமே சுவையான இலைகள் உண்ணக் கிடைக்கும். நீ துணிந்து சிறு கிளையில் இறங்கினால், நீ நினைக்கும் அளவிற்கு மோசமாகக் கீழே விழ மாட்டாய்” என்று கூறியது.

மகன் “எல்லாக் குரங்குகளும் மரக்கிளையின் நுனியில் போய் பசுமையான இலைகளை ஏன் எடுப்பதில்லை?” என்று கேட்டது.

அதற்குத் தந்தை “பல குரங்குகள் ஆபத்து வந்துவிடும் என்று பயந்து, தனக்குப் பிடித்ததை முயற்சி செய்து சாப்பிடாமல், அருகில் கிடைக்கும் மோசமான இலைகளை சாப்பிட்டுக் குறை கூறுகின்றன. மகனே! சவால்கள் நமக்கு முன் உள்ளன. அவைகளை தைரியமாக எதிர்கொள்!” என்று கூறியது.

நீதி:

நம் வாழ்க்கையில் வரும் வாய்ப்புகள் நம்முள் இருக்கும் அளவற்ற ஆற்றல்களையும், திறமைகளையும் வெளியே கொண்டு வருகின்றன.  நல்லதையே நினைத்து நாம் முன்னேறிச் செல்வோம். யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியோ, தோல்வியோ ஒரு முடிவைக் காண முடியும். அப்போது நம் தவறுகளை அறிந்து, நம்மை மேம்படுத்திக் கொண்டு, இலக்கை அடைய முடியும். சோதனைகள் இல்லாமல் நமக்கு பலன் கிடைக்காது. அதனால் நாம் சவால்களை உறுதியுடனும், சரியான மனப்பான்மையுடனும் எதிர் கொண்டு, முன்னேறிச் செல்ல வேண்டும்.

சவால்கள் நம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றுகின்றன.

சவால்களை சமாளிப்பதில் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆகிறது.

மொழி பெயர்ப்பு:

அன்னப்பூரணிசரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment