செயலுக்குப் பிறகு பிரார்த்தனை

நீதி: உண்மை

உப நீதி: நம்பிக்கை, விடாமுயற்சி

ஒரு முறை, ஒருவன் மிகுந்த பிரச்சனையில் சிக்கிக் கொண்டான். அவனது வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டு, கடனில் சிக்கித் தவித்தான். அவன் வேறு வழியில்லாமல் கடவுளிடம் உதவி கேட்க முடிவு செய்தான்.

“கடவுளே!! எனக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள். என் வியாபாரம் நொடித்து விட்டது. எனக்கு உடனடியாகப் பணம் கிடைக்காவிட்டால், என் வீட்டையும் இழந்து விடுவேன். எனக்கு லாட்டரிச் சீட்டில் பணம் விழ வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டான்.

லாட்டரி குலுக்கல் நாளும் வந்தது. வேறு யாரோ பணத்தை ஜெயித்தார்கள்.

அவன் மறுபடியும், “கடவுளே! எனக்கு லாட்டரியில் பணம் விழச் செய். என் வியாபாரமும், வீடும் கைவிட்டுப் போய்விட்டன. எனது காரும் போய்விடும் போலிருக்கிறது”, என்று வேண்டிக் கொண்டான்.

லாட்டரி குலுக்கல் நாள் வந்தது. இந்த முறையும் அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை.

அவன் மறுபடியும், “கடவுளே, நீங்கள் ஏன் என்னை கை விட்டு விட்டீர்கள்? என் வியாபாரம், வீடு மற்றும் கார் அனைத்தையும் இழந்து விட்டேன். என் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றனர். நான் அடிக்கடி வந்து உங்களிடம் உதவி கேட்பதில்லை. அத்துடன் நான் எப்போதும் உங்களுக்காக உழைக்கிறேன். தயவு செய்து இந்த ஒருமுறை எனக்கு லாட்டரியில் பணம் கிடைக்கச் செய்யுங்கள். என் வாழ்க்கையை மீட்டெடுத்து விடுவேன்,” என்றான்.

திடீரென்று அங்கு ஒரு மின்னல்! கடவுளின் குரல் அசரீரியாகக் கேட்டது. “மகனே நீ பாதி வழியாவது முயற்சி செய். முதலில் ஒரு லாட்டரி சீட்டு வாங்கு”, என்றார்.

வாழ்க்கையில் நமக்கு வேண்டியனவற்றை அடையும் முயற்சியில், நாம் முதலில் செயலாற்றத் தொடங்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.

ஓர் உண்மையை நாம் உணர வேண்டும். நமக்கு வேண்டியதை கடவுள் ஒரு போதும் கூரையை கிழித்துக் கொண்டு ஒரு பொட்டலமாகக் கட்டிப் போடப் போவதில்லை. நாம் எவ்வளவு உயர்வான நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், முதலில் நாம் செயலில் இறங்கினால் தான் நினைத்தது நடக்கும்.

நீதி:

நமது கனவுகளை நனவாக்க, நாம் பல விதங்களில் முயற்சி செய்து பார்க்க வேண்டும். பிறகு தான் கடவுளின் கருணையையும் ஆசிகளையும் கோர வேண்டும். நாம் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல் பட வேண்டும். தடங்கல்களால் மனம் தளராமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம். ஆதலால் நாம் மன உறுதியுடன் முன்னேறிச் சென்று, வெற்றி பெறும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வோம். அதன் பிறகு கடவுளின் அருள் தானாகவே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்.

நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது, கடவுளிடம் உரையாடுகிறீர்கள்.

நீங்கள் செயல்படும் போது, கடவுள் சொன்னவற்றை கேட்கிறீர்கள்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment