கடவுளின் சிறந்த கருவியாகி விடு

நீதி: உண்மை, சரியான நடத்தை

உபநீதி: நேர்மறை சிந்தனை

பல வாரங்களாக, பள்ளத்தாக்கிலிருந்து சில வினோதமான சப்தங்கள் எழும்பி, மலைமேல் உள்ள கிராமத்தில் கேட்டன. அந்த சத்தம் என்னவாக இருக்கும் என்று அந்த கிராம மக்கள் வியந்தனர்; ஆனால் யாருக்கும் எதுவும் புரியவில்லை. அங்கிருந்த வயதான பெரியவர்கள் கூட அந்த சப்தங்களை முன்னர் கேட்டதில்லை.

இறுதியாக, அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு இளைஞனை தேர்ந்தெடுத்து, அவனை மலையைக் கடந்து சென்று என்ன நடக்கிறது, என்பதை பார்த்து வரச் செய்ய முடிவு செய்தனர்.

இரண்டு நாட்கள் நடைப் பயணத்திற்குப் பின்னர், அவன் மலை உச்சியை அடைந்தான். அங்கிருந்து கீழே இருந்த பள்ளத்தாக்கில் பார்த்த போது, அங்கே பல மனிதர்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அருகே நெருங்க நெருங்க, அங்கு பலர் வரிசையாக அமர்ந்து கொண்டு, ஒவ்வொருவரும் ஒரு பெரிய கல்லை உளி கொண்டு செதுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

முடிவில் பள்ளத்தாக்கை அடைந்து, அங்கிருந்த ஒரு இளைஞனிடம் சென்று,”நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று கேட்டான்.

அவன் ஒரு முணுமுணுப்புடன், “நான் வேலை நேரம் முடியும் வரை பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

குழப்பத்துடன் அருகில் இருந்த பெண்ணிடம் சென்று அவன், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டான்.

அதற்கு அவள், “என் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பணம்

சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினாள்.

தலையை சொறிந்து கொண்டே அவன் மூன்றாவது நபரிடம் சென்று,”நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டான்.

அதற்கு “நான் ஒரு அழகான சிலையை வடிவமைக்கிறேன்” என்று பதில் வந்தது.

நான்காவது நபரிடமும் இதே கேள்வியைக் கேட்டான்.

அதற்கு அவர், “நான் ஒரு கோவிலை எழுப்ப உதவி செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

அந்த மலைவாசி “ஆஹா, எனக்கு இப்போதுதான் புரியத் தொடங்குகிறது” என்றான்.

ஐந்தாவதாக இருந்த பெண்மணியிடம் சென்று, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்றான். அதற்கு அவள், “இந்தக் கோவிலை கட்டுவதற்கு உதவி செய்வதன் மூலம், நான் இந்த ஊரின் மக்களுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும் பெரும் தொண்டு செய்து கொண்டிருக்கிறேன்” என்றாள்.

அவன் “அருமை!” என்று கூறிக் கொண்டே அடுத்து ஆறாவதாக இருந்த மனிதரிடமும் இதே கேள்வியைக் கேட்டான். அதற்கு அம்மனிதர் “நான் இந்தக் கோவிலைக் கட்டுவதற்கு உதவி செய்வதன் மூலம், அதைப் பயன்படுத்துபவர்களுக்கு தொண்டு செய்து, அதன் மூலம் நானும் முக்தி அடைய முயற்சிக்கிறேன்” என்றார்.

இறுதியாக, அந்த வரிசையில் கண்களில் ஒளியுடனும், உதட்டில் நிறைவான புன்னகையுடனும் அமர்ந்திருந்த ஒரு வயதான உற்சாகமான மனிதரிடம் சென்று, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்றான்.  

அவர் புன்னகையுடன், “நான் செய்கிறேனா?” என்று கேட்டுவிட்டு வாய்விட்டு சிரித்தார். “அந்த அகம்பாவம் கடவுளிடம் கரைந்து வெகு காலமாகிவிட்டது. நான் என்று எதுவும் என்னிடத்தில் இல்லை. என்னுள் இருக்கும் இறைவன் என்னை இயங்க வைத்து, மற்றவர்களை விழிப்புணர்வு பெறச் செய்து, தன்னிடம் இழுத்துக் கொள்கிறார்” என்றார்.

நீதி:

ஒரு மாமனிதர்  நீங்கள் அடைய வேண்டிய உயரங்களை முடிவு செய்வது, உங்களுடைய மனப்பான்மை தானே தவிர உங்களுடைய தகுதி அல்ல” என்று கூறினார் . உங்களின் மனம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அது உங்களுடைய மிகப் பெரிய பலமாகவும் இருக்கலாம் அல்லது மிகப் பெரிய பலவீனமாகவும் இருக்கலாம். ஒரு நேர்மறை சிந்தனை உங்களுக்கு ஆனந்தத்தை அளித்து உங்களின் வாழ்க்கையையே மாற்றலாம். பிரகாசமான பக்கத்தைப் பார்த்தால் உங்களின் வாழ்க்கையே பிரகாசமாக இருக்கும். அது உங்களுக்கும் நன்மை செய்து, உங்கள் சுற்றுச்சூழலையும் அதில் உள்ள மக்களையும் நல்வழிப்படுத்தும். உங்களது அணுகுமுறை திடமானதாக இருந்தால் அது அடுத்தவர்களையும் பற்றிக் கொள்ளும். அது நீங்கள் சுற்றி உள்ள அனைத்திற்கும் ஒளி கொடுப்பது போன்றதாகும். இந்த உலகையே கடவுளின் ஒரு லீலையாகக் கருதி, நம்பிக்கையுடன் அவர் உங்களுக்குள் இருந்து வழி நடத்தச் செய்தால், இந்த நேர்மறை அணுகுமுறை வளர்வதற்கு வழிவகை செய்யும்.

உங்கள் வாழ்க்கையை கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்.

உங்களை விட அவர் அதனை சிறப்பாக வழி நடத்துவார்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment