பிரச்சனைகளை சுமக்கும் மரம்

நீதி: சரியான நடத்தை / உண்மை

உப நீதி: பிரச்சனைகளை விட்டு விலகுதல்

ஒரு மனிதர் தனது பழைய பண்ணை வீட்டை பழுதுபார்க்க, ஒரு தச்சரை பணியில் அமர்த்தினார். தச்சருக்கு முதல் நாளே வேலை பார்ப்பதில் பல தடைகள் ஏற்பட்டன. காலையில் காரை ஓட்டிச் செல்லும் போது, சக்கரத்தில் பிளவு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் தாமதம் ஆகியது. மேலும் அவருடைய மின்சார ரம்பம் வேலை செய்யவில்லை; இறுதியாக, அவருடைய பழைய வண்டியும் கிளம்பவில்லை.

அம்மனிதர் தச்சரை வீடு வரை அழைத்து சென்ற போது, தச்சர் வழி முழுவதும் மெளனமாக, ஆழ்ந்த வருத்தத்துடன் இருந்தார். அன்றைய நிகழ்வுகளால் அவர் கவலையாக இருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. வீடு அருகே வந்ததும், குடும்பத்தினரை சந்திக்க தச்சர் அம்மனிதரை உள்ளே அழைத்தார்.

அவர்கள் வாசற் கதவை நோக்கிச் செல்லும் போது, தச்சர் ஒரு மரத்தின் அருகே சிறிது நேரம் நின்று, கிளைகளின் நுனிகளை இரு கைகளாலும் தொட்டுப் பார்த்தார்.

வீட்டுக் கதவை திறந்த பின்னர் தச்சரிடம் ஒரு அற்புதமான மாற்றத்தை அவர் கண்டார். தச்சர் புன்சிரிப்புடன் தனது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் அன்புடன் அணைத்துக் கொண்டார். அனைவருக்கும் அவரை அறிமுகம் செய்தார். பின்னர் தச்சர் அவரை வழி அனுப்ப வாகனம் வரை உடன் வந்தார்.

அவர்கள் அம்மரத்தை கடந்து சென்ற போது, உடன் வந்த மனிதரால் தனது ஆர்வத்தை அடக்க முடியவில்லை. தச்சரிடம் தான் முன்பு கண்டதை பற்றி விசாரித்தார்.

அதற்கு தச்சர் “ஓ அதுவா, அதுதான் என் பிரச்சனைகளை சுமக்கும் மரம்,” என்று பதிலளித்தார். பிறகு “வேலையில் பிரச்சனைகள் இருக்கும். அவற்றை தடுக்க இயலாது என்பதை நான் அறிவேன்; ஆனால் நிச்சயமாக பிரச்சனை, வீட்டில் இருக்கும் என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இல்லை. அதனால் தினமும் இரவு வீட்டுக்கு வரும் முன், எனது பிரச்சனைகளை இந்த மரத்தில் தொங்கவிட்டு விடுவேன். பின்னர் மறுநாள் காலையில், நான் அவற்றை மீண்டும் எடுத்துச் செல்வேன்” என்றார்.

அவர் சிரித்துக் கொண்டே “வேடிக்கையான விஷயம் என்னவென்றால், முந்தைய இரவு நான் பிரச்சனைகளை தொங்கவிடும் போது நினைவில் இருந்த அளவுக்கு, மறுநாள் அவற்றை எடுத்துச் செல்ல வெளியே வரும்போது இருப்பதில்லை” என்றார்.

நீதி:

பிரச்சனைகளை விட்டு விலகி செல்லுதல் என்பது நாம் ஒரு முறை அல்ல; ஒவ்வொரு நாளும், மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய ஒன்றாகும். கடந்த காலத்தை மறந்து, நம்மை நாமே மன்னித்து, மற்றவர்களையும் மன்னித்து முன் நோக்கி செல்ல வேண்டும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்லும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொண்டால், மன உறுதியுடனும், தைரியத்துடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள, அது நமக்கு உதவும். கடின உழைப்புடன் இந்த குணங்கள் இருந்தால், நம் வாழ்வில் எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் சமாளித்து, சிறந்த மிளிர்வுடன் வெளிவர முடியும்.

மொழி பெயர்ப்பு

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment