நீதி நிறைந்த சிறு கதைகள்

உபயம்: http://TheInspirationalStories.com

சேவல் செய்த கடைசித் தவறு

ஓரிரவில் இரண்டு திருடர்கள் ஒரு பண்ணைக் கட்டிடத்தின் அருகில் திரிந்து கொண்டிருந்தனர். கட்டிடத்திற்குள் ஏதோ ஒன்று நகர்வது போல் அவர்களுக்குக் கேட்டது. மிக ஜாக்கிரதையாக அவர்கள் அது என்ன என்று பார்ப்பதற்காக மேலே ஏறினர். அது ஒரு சேவல். “ஆஹா! நாளை இரவு சாப்பாட்டிற்கு இது சரியாக இருக்கும்” என்று திருடர்கள் கத்தினர்.

அவர்கள் அதைப் பிடித்து இழுத்துக் கொல்ல முற்படும்போது அந்தச் சேவல் பயத்தில் அலறியது. அது  “தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள். நான் உங்களுக்கு உபயோகமாக இருப்பேன். நான் தினமும் அதிகாலையில் உங்கள் வேலையைக் குறித்த நேரத்தில் தொடங்குவதற்காக எழுப்பி விடுவேன்”என்றது.

“அதை தான் நாங்கள் விருப்பப் படவில்லை” என்று அந்தத் திருடர்கள் கூச்சலிட்டனர். திருடர்கள் “நீ மக்களை எழுப்பி விட்டால், நாங்கள் அவர்கள் வீடுகளில் திருடும்போது எங்களைப் பிடித்து விடுவார்கள்” என்றனர்.

 அதுதான் அந்தச் சேவலின் இறுதி நாளாக இருந்தது.

 நீதி:

“எங்கே சிந்திக்கும் திறன் அற்றுப் போகிறதோ, அங்கே தற்பெருமையாக பேசுதல் ஆரம்பமாகிறது.” – ஜப்பானியப் பழமொழி

_____________________________________________________

பொறாமை பிடித்த ஆடு

ஒரு ஆடும் ஒரு கழுதையும் ஒரே பண்ணையில் வாழ்ந்து வந்தன. ஆடு தன் உணவைத் தானே தேடிக் கொள்ளும். ஆனால் கழுதையை மிகவும் கடினமாக வேலை வாங்குவதால், பண்ணையார் கழுதைக்குத் தானே உணவளித்தார் . கழுதையின் கடினமான உழைப்பை மறந்து, ஆடு அதன் மேல் பொறாமை அடைந்தது.

கழுதை வேலை செய்வதை நிறுத்தி விட்டால் தனக்கு உணவு கிடைக்கும் என்று அது நினைத்தது. அதனால் அது கழுதையை ஒரு பெரிய குழிக்குள் தள்ளிவிட்டது. கழுதை மிகவும் காயம் அடைந்தது.

பண்ணையார் விலங்கு மருத்துவரை அழைத்து கழுதையைப் பரிசோதிக்கச் செய்தார். கழுதையை உடனடியாக குணப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு ஆட்டு சூப் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.

கழுதையின் உணவைத் தான் அடைய வேண்டும் என்று எண்ணிய ஆடு, தானே அந்தக் கழுதைக்கு உணவானது.

நீதி: “பொறாமையே ஆத்மாவைப் பீடித்த புண்ணாகும்”  – சாக்ரடீஸ்

____________________________________________________

சாப்பிடுவதற்கு முன் கவனி

உங்களுக்கெல்லாம் தெரியும் நாய்கள் எப்படிப் பட்டவை என்று. நீங்கள் ஒரு துளி உணவை மேசையிலிருந்து கீழே போட்டால், அவை அது என்ன என்று தெரியும் முன்பே விழுங்கி விடும். ஆனால் சில சமயம் அப்படிச் செய்திருக்க வேண்டாமோ என்று நினைக்கும்.

ஃபானி என்ற பண்ணை நாயை, அதனுடைய எஜமானர் ஜோஷ் தன் குடும்பத்தினருடன் உணவருந்தும் போது வீட்டினுள் அனுமதிப்பதில்லை. ஒரு நாள் அது யாரும் பார்க்காத  போது, வீட்டினுள் நுழைந்து மேசையின் அடியில் ஒளிந்து கொண்டது.

திடீரென்று அதன் அருகில் ஒரு பெரிய உணவுத் துண்டு விழும்வரை அது மிகவும் அமைதியாக இருந்தது; யோசிக்காமலேயே அதை உடனே விழுங்கி விட்டது. பிறகு பெரிதாக ஊளையிட்டபடி, தன் வயிற்றை ஒரு பாதத்தினால் பிடித்துக் கொண்டே வெளியில் ஓடியது. அந்தக் குடும்பம் ஒரு மிகவும் சூடான கறியை இரவு உணவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

நீதி: “ஆசை கண்மூடித்தனமானது; பேராசை மன நிறைவை உண்டாக்காது.” – ஒரு சீனப் பழமொழி

ஒரு நல்ல திருப்பம் இன்னொன்றுக்கு வழி வகுக்கும்.

ஃப்ரெட் என்ற விவசாயி ஒரு இளம் கழுகு, பொறியில் மாட்டியிருப்பதைப் பார்த்தார். அவ்வளவு அழகான பறவை, வலியில் துடிப்பதைப் பார்த்துத் தாங்க முடியாமல், அவர் அதை விடுவித்தார். சில நாட்கள் கழித்து அவர் ஒரு பழைய சுவரின் நிழலில், மதிய உணவாக ரொட்டியும், பாலாடைக் கட்டியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று அந்தக் கழுகு, தன் இறக்கைகளை அடித்துக் கொண்டு, தாழப்  பறந்து வந்து அவரின் தலையிலிருந்த குல்லாவைத் திருடிச் சென்றது. தரையிலிருந்து சிறிது மேலே பறந்து செல்லும் போது, ஃப்ரெட் அதைத் துரத்திக் கத்திக் கூச்சலிட்டதும், அது குல்லாவைக் கீழே போட்டது.

ஃப்ரெட் மறுபடியும் அந்தக்குல்லாவைத் தலையில் அணிந்து, தன் மதிய உணவை முடிப்பதற்காக மிகுந்த சிரமத்துடன் திரும்பினார். ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் எந்தப் பழைய சுவரின் நிழலில் அமர்ந்திருந்தாரோ, அந்தச் சுவர் இடிந்து விழுந்திருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டார்கள்.

நீதி: “ நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்கு நன்மை வந்து சேரும்,” – ஒரு டானிஷ் பழமொழி

மொழி பெயர்ப்பு

அன்னப்பூரணி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment