ஆன்மீகத் தேடல்

நீதி: உண்மை

உப நீதி: விடாமுயற்சி / நம்பிக்கை

ஒரு துறவி, தனது சீடருடன் ஒரு கிராமத்தின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த ஒரு முதியவர், துறவியை பார்த்து “முனிவரே, நான் கடவுளை எப்படி நெருங்குவது?” என்று கேட்டார்.

அதற்கு அவர் “வாழ்க்கையை நன்றாக அனுபவியுங்கள், நம்மை படைத்த ஆண்டவனை மகிழ்ச்சியுடன் போற்றுங்கள்” என்று பதிலளித்தார்.

இருவரும் தொடர்ந்து செல்ல முற்படும் போது, ஒரு இளைஞன் அவர்களை நெருங்கினான்.

அவன் துறவியை நோக்கி “கடவுளை நெருங்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்.

துறவி “வாழ்க்கையில் நீ உனக்காக பணத்தை செலவித்து, சந்தோஷமாக அனுபவிக்கும் நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும்” என்றார்.

அந்த இளைஞன் அங்கிருந்து சென்ற பிறகு, சீடன் குருவை பார்த்து, “நாம் மகிழ்ச்சியாக இருக்க, நேரத்தை செலவிட வேண்டுமா இல்லையா என்பதில் தெளிவு இல்லாதது போல் இரு வித பதில்கள் அமைகிறதே. கொஞ்சம் விளக்க முடியுமா?” என்று கேட்டான்.

துறவி புன்சிரிப்புடன் ‘ஆன்மீகத் தேடல் என்பது ஒரு பள்ளத்தின் குறுக்கே கட்டப்பட்ட கைப்பிடி இல்லாத பாலம் போன்றது. யாராவது வலது பக்கத்திற்கு மிக அருகில் சென்றால், ‘சற்று இடது புறம் வாருங்கள்!’ என்று கூறுவேன்; இடது பக்கத்திற்கு மிக அருகில் சென்றால், ‘வலது புறம் வாருங்கள்!’ என்று கூறி நடுநிலைமைக்கு அருகே இருக்கும் பாதையில் நடத்தி செல்ல முயல்வேன்’. “நடுநிலை அல்லாமல் உச்ச நிலைக்கு செல்லும் போது, அது நம்மை சரியான வழியிலிருந்து திசை திருப்பி, கடவுளிடமிருந்து விலகச் செய்கிறது” என்று விளக்கினார்.

நீதி:

ஆன்மிகப் பயணம் என்பது ஒவ்வொரு தனிமனிதனும் அவரவர் பாதையை உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு தேடலாகும். ஒரே ஒரு வழியைப் பின்பற்றுவதால் மட்டுமே இலக்கை அடைந்து விடமுடியாது. நம் இதயத்தில் இருக்கும் உண்மையை நாம் உணர வேண்டும், அது நம்மை வழிநடத்தும். ஆன்மீகப் பயணம் என்பது நாம் யார் என்பதை மீட்டெடுக்கும் செயலே ஆகும். நம்மை நாமாக இருக்க விடாத பல எண்ணங்களையும் செயல்களையும் நிராகரிக்க, இந்தத் தேடல் உதவும். எனவே, உன்னதமான ஞானிகளின் வழிகாட்டுதலைப் பெறுவோம். நமது பயணத்தை எளிதாக்கவும், பாதையை சீர்செய்யவும், உறுதுணையாய் இருக்கும் அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை வைப்போம். இந்த முயற்சி மிகவும் முக்கியமானது, ஏனென்றால் ஆன்மீகப் பயணம் என்பது மனநிலை மாற்றத்தைப் பற்றியது.

ஆன்மீகப் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டுமானால், வாழ்க்கையில் அனைத்து பரிமாணங்களிலும் முன்னேற வேண்டும். மனதளவில் நீங்கள் சந்தோஷமாக இருப்பதோடு, உங்களைச் சுற்றி இருப்பவர்களுடனும்   சந்தோஷமாக இருக்க வேண்டும் – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

மொழி பெயர்ப்பு,

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment