கடவுள் ஒரு பிரார்த்தனை தூரத்தில் தான் உள்ளார்

நீதி: சரணாகதி, விசுவாசம்

உப நீதி: நம்பிக்கை, பொறுமை

இனிய காலை வணக்கம். நான் கடவுள். இன்று நான் உங்களது அனைத்து பிரச்சனைகளையும் பார்த்துக் கொள்வேன்.

எனக்கு உங்களின் உதவி தேவை இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். உங்களால் கையாள முடியாத அளவிற்கு ஏதாவது ஒரு சூழ்நிலை உங்கள் முன் இருந்தால், அதை சரி செய்ய நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம். என்னிடம் விட்டு விடுங்கள். சரியான நேரத்தில் அதை நான் சரி செய்வேன், நீங்கள் நினைக்கும் பொழுது அல்ல.

பிரச்சனைகளை என்னிடம் விட்டு விட்டால், நீங்கள் அதை நினைத்து கவலைப் படுவதோ, அல்லது உங்கள் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறியவோ நினைக்காதீர்கள். அப்படி செய்தால் அதற்கான தீர்வு தள்ளிப் போகலாம்.

நீங்களே தீர்வு கண்டு கொள்ளும்படியான சூழ்நிலையாக இருந்தால், பிரார்த்தனையின் மூலம் என்னிடம் ஆலோசித்து அது சரியான தீர்வா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நான் உறக்கம் கொள்வதோ ஓய்வெடுப்பதோ இல்லை. அதனால் நீங்கள் தூக்கத்தைத் தொலைக்க வேண்டிய அவசியமில்லை. அமைதி கொள் குழந்தாய்!! நீ என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் நான் ஒரு பிரார்த்தனை தூரத்தில் தான் உள்ளேன்.

நீதி:

சரணாகதி என்ற பிரார்த்தனை மிகவும் கடுமையான பிரார்த்தனை. நம் நம்பிக்கையை மிகக் கடுமையான சோதனைக்கு உள்ளாக்குகிறது – நமது நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள், ஏன், வாழ்வதற்கான ஒரு மன உறுதியைக் கூட கடவுளிடம் விட்டு விட வேண்டும். எத்தனை நபர்கள் கடவுளிடம் முழுமையாக சரணடைந்து, “எல்லாமே நீங்கள் நினைக்கும்படி மட்டுமே நடக்கும்; நான் நினைக்கும்படி அல்ல” என்று விட்டு விட முடியும்! கடவுளை முழுமையாக நம்பக் கற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் உங்கள் வேலையை நீங்கள் தளரா ஊக்கத்துடன் செய்ய வேண்டும்.

ஒரு பிரச்சனைக்கும் அதன் தீர்வுக்கும் இடையே உள்ள தூரம் என்பது உங்கள் முழங்காலுக்கும் தரைக்கும் உள்ள தூரம் தான். கடவுளின் முன் மண்டியிடுபவர்கள், எந்த பிரச்சனையையும் தைரியமாக சந்திக்கலாம். ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருங்கள்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment