நித்ய பிரார்த்தனையின் முக்கியத்துவம்

நீதி: உண்மை

உபநீதி: பற்றுறுதி, திட நம்பிக்கை

ஒரு மடாலயத்தில், நீண்ட காலை நேரப் பிரார்த்தனைக்குப் பிறகு, புதிதாக வந்த ஒருவர் தலைமை மடாதிபதியிடம், “நீங்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பிராத்தனைகள் எல்லாம் கடவுளை நம் அருகில் கொண்டு வருமா?” என்று கேட்டார்.

“நான் மற்றொரு கேள்வியுடன் பதிலைக் கூறுகிறேன்,” என்று சொன்ன மடாதிபதி, “உன்னுடைய எல்லாப் பிரார்த்தனைகளும் நாளை சூரியனை உதிக்க வைக்குமா?”  என்று கேட்டார்.

அதற்கு அவன் “நடக்காது! நான் எவ்வளவு பிரார்த்தனை செய்தாலும், இயற்கையின் நியதிக்கு கட்டுப்பட்டு சூரியன் உதிக்கும்” என்றான்.

தலைமை மடாதிபதி, “நன்று. உன் கேள்விக்கு பதில் நீ சொன்னதிலேயே உள்ளது. நம் செய்யும் பிரார்த்தனைகளுக்கு அப்பாற்பட்டு, கடவுள் நம் அருகிலேயே இருக்கிறார்” என்றார்.

இப்போது கேள்வி கேட்டவன் திகைத்து நின்றான்.

பிறகு அவன், “அப்படியென்றால் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டாமா? நம் பிரார்த்தனைகள் பயனற்றவையா?”

அதற்கு மடாதிபதி, “நிச்சயமாக இல்லை. நீ அதிகாலை எழுந்திருக்காவிடில், சூரியன் உதிப்பதைப் பார்க்க முடியாது. அது போல கடவுள் நம் அருகில் இருந்தாலும், நாம் பிரார்த்தனை செய்யாவிடில், கடவுளின் அருகாமையை உணர முடியாது” என்றார்.

உடலைப் பாதுகாக்க உடற்பயிற்சி தேவையானது; அது போல, ஆத்மாவைப் பேணிக் காக்க பிரார்த்தனை அவசியம். பிரார்த்தனை ஆத்ம பலத்தை ஊக்குவித்து, நிலைப்படுத்தி, வெளிப்படுத்துகிறது. தினம் செய்யும் பிரார்த்தனை, கடவுளிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி, ஆன்மீகம் நிறைந்த வாழ்க்கையை வாழ வழி வகுக்கிறது. இது மிகவும் வலிமையானது. அதனுடைய சக்தி வாழ்வில் நல்ல மாற்றங்களை அளிக்க வல்லது. பிரார்த்தனை மனதின் அமைதியை மேம்படுத்துகிறது. நம் எண்ணங்களை தூய்மை செய்கிறது. நாம் பிரார்த்தனை செய்வதால், கலக்கங்கள் மறைந்து, வாழ்க்கையில் எல்லாம் கைக்கூடுவதை உணர முடியும்.

நீதி:

பிரார்த்தனை ஒரு உள்ளார்ந்த மன ரீதியான மனப்பான்மை – எச்சமயமும் நம்பிக்கையுடன் செயற்பட்டால் கடவுளிடம் ஓர் ஆரோக்கியமான உறவு முறையை மேம்படுத்த முடியும். நாம் தொடர்ந்து பயிற்சி செய்தால், பிரார்த்தனை மூலம் செய்ய முடியாத விஷயங்களை செய்ய முடியும். முக்கியமான விஷயம் என்னவென்றால், “பிரார்த்தனை, இறுதி இலக்கான நம் ஆத்மாவிற்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.”

பிரார்த்தனை செய்வதால், நமக்கு பொருள் சார்ந்த வசதிகள் சற்று குறையலாம்; ஆனால், பிரார்த்தனை செய்யாமல் இருந்தால் வசதிகளை பெற முடியும் என்பது உறுதி அல்ல.  

மொழி பெயர்ப்பு

கோதண்டராமன், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment