பொறுமையும், உழைப்பும்

நீதி: உண்மை, விடாமுயற்சி

உபநீதி: உறுதி, பொறுமை

ஒருமுறை ஒரு அரசர், தனி உதவியாளர் என்ற பதவியை பெற அவா இருப்பவர்களை தன்னை வந்து சந்திக்குமாறு அறிவித்தார்.

பல நபர்கள் வந்து குவிந்தனர். அவர்களை அரசர் ஒரு குளத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு அவர்  “இந்தக் குளத்தில் உள்ள நீர் அனைத்தையும், இந்தக் குடத்தைக் கொண்டு வெளியேற்றுபவரே, தேர்ச்சி பெற்றவர் ஆவார். ஆனால் ஞாபகமிருக்கட்டும், இந்தக் குடத்தில் ஒரு ஓட்டை இருக்கிறது” என்று கூறினார்.

பலரும் முயற்சி செய்யாமலே வெளியேறினர். அவர்கள் தங்களுக்குள், “அரசர் ஏற்கனவே எவரையோ தேர்ந்தெடுத்து விட்டார். நாம் போகலாம்” என்று கூறிக் கொண்டனர்.

ஆனால் ஒருவன் மட்டும் பொறுமையுடன் குளத்து நீரை பானையில் நிரப்பிக்  கொண்டிருந்தான். சில நொடிகளிலேயே ஓட்டை வழியாக அனைத்து தண்ணீரும் வெளியேறியது. அவன் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஒருவழியாக கடைசியில் குளம் காலியானது. அதனடியில் ஒரு வைர மோதிரம் கிடந்தது. அவன் அதைக்  கொண்டுபோய் அரசரிடம் கொடுத்தான்.

அதற்கு அந்த அரசர், “இது உனது சகிப்புத்தன்மைக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசு. நீதான் இந்தப் பதவிக்கு தகுதியானவன்” என்று கூறினார்.

கருத்து:

1. கடினமான காலங்கள் நீடிப்பதில்லை; கடின உழைப்பாளிகள் நீடிப்பர்.

2. வாழ்க்கை என்பது சிறப்பாக செயல்படுவதற்கு இடைவிடாமல் செய்யப்படும் முயற்சிகளே.

3. சகிப்புத்தன்மை என்பது அளவில்லா பொறுமையாகும்.

நீதி:

வலிமை தான் மிகப் பெரிய சக்தி. உடம்பால் உழைப்பது மட்டுமே சக்தி அல்ல. பிரச்சனைகளை சமாளிப்பதற்கான மன உறுதி நிச்சயமாக வேண்டும். அதனால், சவால்களை கண்டு பயந்து ஓடாமல், அவைகளை பொறுமையுடன் எதிர்கொண்டு, நம்மால் முடிந்த முயற்சியை சிறப்பாக செய்தால், நம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து வெற்றிகரமாகத் திகழலாம்.  விடாமுயற்சி, பொறுமை மற்றும் வலிமை மட்டுமே வெற்றிக்கு சரியான பாதை.

பொறுமையாக சமாளிக்கும் திறமை இல்லையென்றால், ஒரு சிறிய விஷயத்தைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. பல விஷயங்கள் நம் மனப்பான்மையை சார்ந்துள்ளது – தலாய் லாமா.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment