ஞானம்

நீதி: சரியான நடத்தை, உண்மை

உப நீதி: விழிப்புணர்வு, ஞானம்

ஒரு மாடு மேய்க்கும் சிறுவன், தினமும் தனது மாடுகளை புல்வெளிகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மாலையில் அவைகளை மாட்டுக் கொட்டிலுக்கு மறுபடியும் அழைத்து வருவான்.

ஒரு நாள் மாலை, அவன் பசுக்களை கட்டிக் கொண்டிருந்த போது, ஒரு பசுவின் கழுத்தில் கயிறு இல்லாததை கவனித்தான். கயிற்றை கட்டாமல் விட்டு விட்டால், அந்தப் பசு ஓடிவிடுமோ என்று அவன் பயந்தான்; ஆனால் இரவு நேரமாக இருந்ததால், புதுக் கயிற்றை வாங்கி வரவும் முடியவில்லை. அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அதனால் அவன் அருகில் வசித்து வந்த ஒரு அறிவாளியிடம் சென்று விஷயத்தைக் கூறி, ஆலோசனைக் கேட்டான்.

அந்த மனிதர் சிறுவனிடம், “நீ பசுவைப் பிடித்துக் கட்டுவதைப் போல் பாவனை செய்; அச்செயலை அந்த பசு பார்க்கும்படி செய்” என்று கூறினார். அந்தச் சிறுவனும் அவர் கூறியபடியே பாவனை செய்தான்.

அடுத்த நாள் காலை, அந்தப் பசு அப்படியே அதே இடத்தில் நிற்பதை சிறுவன் கண்டான். மற்ற பசுக்களை எல்லாம் அவிழ்த்து விட்டவுடன் அவை வெளியே சென்றன.

அவன் புல்வெளிக்குச் செல்ல கிளம்பிய போது, அந்த பசு மட்டும் இரவு முழுவதும் கொட்டிலில் நின்ற இடத்திலேயே நகராமல் நிற்பதை கவனித்தான். அதனை வெளியே அனுப்ப எத்தனையோ விதங்களில் கனிவாகப் பேசி இணங்கச் செய்தும், பசு அவ்விடத்திலிருந்து சிறிதும் நகரவில்லை.

சிறுவன் குழம்பினான்.

அந்த அறிவாளியிடம் சிறுவன் மறுபடியும் சென்றான். அவர், “அந்தப் பசு இன்னும் தான் கட்டப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. நீ சென்று அதனை அவிழ்த்து விடுவது போல் பாவனை செய்”, என்று கூறினார். சிறுவனும் அதே போல் செய்ய, பசுவும் சந்தோஷமாக அங்கிருந்து நகர்ந்து சென்றது.

அந்தப் பசுவைப் போல் தான் நாமும். அகங்காரம் என்னும் கயிற்றால் நாம் கட்டப்பட்டிருப்பதாக நினைத்து, அறியாமையில் உழல்கிறோம். உண்மையில் நாம் மிகவும் சுதந்திரமானவர்கள். இதனை நாம் உணர வேண்டும்.

நீதி:

அறியாமை என்னும் மாயையால், நாம் தேவையற்ற துன்பங்களுக்கு ஆளாகி விடுகிறோம். ஆதலால், நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருந்தால், நமது தொடர் முயற்சியால் விவேகத்தை அடையலாம். மாயையிலிருந்து விடுபட்டு, வெற்றிப் பாதையில் செல்லலாம்.

ஞானத்தின் கதவுகளைத் திறந்து, அறியாமை என்னும் திரையைக் கிழித்தெறிந்தால், தெய்வீகப் பேரின்பத்தின் இருப்பிடத்தை அடையலாம். இதன் மூலம் நாம் எப்போதும் அமைதியுடன் திகழ்வோம் – ஸத்ய ஸாயி பாபா.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment