கடவுளின் கருணை மிகவும் அவசியம்

நீதி: உண்மை

உபநீதி: பணிவு, பொறுமை

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நற்சிந்தனைக் கதைகளிலிருந்து எடுக்கப்பட்ட கதை.

ஒரு முறை, சாது ஒருவர் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு சில மந்திர சக்திகள் கிடைத்தன. அதற்குப் பிறகு அவர், கடவுளை உணர்வதற்கான தனது முயற்சிகளை மறந்து, ஆன்மீகப் பாதையை விட்டு விலகினார்.

கடவுள் இதனை அவருக்குப் புரிய வைப்பதற்காக, ஒரு சாதாரண மனிதனைப் போல் அவர் முன் தோன்றினார்.

கடவுள் அந்த சாதுவிடம், அவருக்கு மந்திர சக்திகள் இருக்கின்றனவா என்று கேட்க, அவரும் மிகுந்த பெருமையுடன் “ஆம்” என்றார்.

கடவுள், அங்கு நின்றிருந்த ஒரு யானையை அந்த சாதுவிடம் காண்பித்து, “இந்த யானையை உங்களால் கொல்ல முடியுமா?”, என்று வினவினார்.

ஆணவம் நிறைந்த புன்னகையுடன் அந்த சாது, “இது ஒரு பெரிய விஷயமே இல்லை”, என்று கூறினார். பிறகு, சிறிது மண் துகள்களை எடுத்து, ஏதோ மந்திரங்களை உச்சரித்து, அதனைக் காற்றில் வீசினார். உடனே அந்த யானை மண்ணில் விழுந்து, வலியால் துடித்து இறந்து போனது.

மனித ரூபத்தில் தோன்றிய கடவுள், “அற்புதம்”, என்று கூறி, “இப்போது இந்த யானையை உயிர்ப்பிக்க உங்களால் முடியுமா?”, என்று கேட்டார்.

மறுபடியும் அந்த சாது சில மண்துகள்களை எடுத்து, மந்திரங்களை உச்சரித்து காற்றில் வீசினார். அந்த யானைக்கு மறுபடியும் உயிர் வந்து, எழுந்து உணவைத் தேடிச் சென்றது.

பிறகு கடவுள், “உங்களுடைய இந்த சக்தி அதிசயமானது; ஆனால் நான் ஒன்று கேட்கட்டுமா? நீங்கள் அந்த யானையை முதலில் கொன்று, பிறகு உயர்ப்பித்தீர்கள். இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது? இந்தச் செயல் உங்களை சிறந்தவராக மாற்றியிருக்கிறது எனக் கருதுகிறீர்களா? கடவுளை உணர்வதற்கு அது உங்களுக்கு உதவியதா?”, என்று கேட்டார்.

இதைக் கேட்டுவிட்டு கடவுள் மறைந்தார்.

“அகங்காரம்” என்பது சிறிய வார்த்தையாக இருந்தாலும் அதனை நமது அகராதியில் மிகவும் முக்கியமாகக் கருதினால், அது நமது எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை கட்டுப்படுத்தத் தொடங்கிவிடும். “அகங்காரம்” என்பது நமது கண்ணில் விழுந்த தூசி போன்றது. அது நமது பார்வையை பாதித்து, தெளிவாக பார்ப்பதிலிருந்து தவிர்த்து விடும். நம் வழியில் குறுக்கிட்டு நம் சந்தோஷங்களைப் பறித்து விடும். நம்முள் அன்பு பிரகாசிக்க வேண்டுமானால், நாம் அகங்காரத்தை விட்டுவிட வேண்டும். கடவுள் இருக்கும் இடத்தில், அகங்காரம் இருக்க முடியாது.

நீதி:

அகங்காரம் என்பது, தானே எல்லாவற்றிலும் சரி என்ற ஆட்டிப்படைக்கும் எண்ணம் ஆகும். அதனால் அது சுயநலமானது. பெருமை என்பது ஒரு மனிதனைப் பற்றிய உண்மையான விஷயங்கள் மற்றும் அவனது சாதனைகளைப் பற்றி அவன் கொண்ட உணர்வுகளைச் சார்ந்தது. அதனால் அது அவ்வளவு சுயநலமானது அல்ல. வாழ்க்கை, நம்மை இங்கே ஒரு நொடி நிற்கச் சொல்லி, அகங்காரமும், தற்பெருமையும் நம்மைக் கட்டுப்படுத்தாமல், ஒரு புதிய கோணத்தில் பார்க்கச் சொல்கிறது; அதுவும், நாம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்காகத் தான். ஆதலால், நாம் பணிவுடன் இருந்து, நம்மை நாமே ஒரு நல்ல மேம்பட்ட மனிதராக மாற்றிக் கொள்வதற்கு முனைப்புடன் செயல்படுவோம்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment